படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்தவும் -  அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்தவும் -  அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும்  நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(30.05.2024) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எம்.எஸ் சாள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில்,

 ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட   உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் தொடர்பாகவும், கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முனனேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் இருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கு அமைவாக சுண்ணக்கல்லை எடுத்துச  செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், சரியானவர்களுக்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் வரையில், ஆனையிறவை தாண்டி சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்து தொடர்பாகவும் பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொன்னலை, திருடவடி நிலை பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினருக்கு குறித்த காணியை சட்ட ரீதியாக வழங்குவதற்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள்  இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாகவும்,  இவ்வாறான படைத் தரப்பினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நில அளவைத் திணைக்கள அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி உட்பட்ட உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடி ஒரு உறுதியான தீர்மானத்தினை மேற்கொள்ளும் வரையில் படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்ளுக்கு அறிவுறுத்தியதுடன், படைத் தரப்பினால்  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விபரத்தினையும் தனக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் அபிவிருத்தி சார் முன்மொழிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள  விசேட நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது, ஒரு சிலருக்கு மாத்திரம் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் ஆதங்கம் வெளியிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சில உறுப்பினர்கள் விசேட நிதிஒதுக்கீட்டினை பெற்றுள்ளதாகவும், குறித்த விசேட நிதி ஒதுக்கீடு ஏனையவர்களுக்கும் கட்டமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டதுடன்,  மக்களுக்கான அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் நிதி என்ற அடிப்படையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் எனவும், தனக்கான விசேட நிதியையும் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, இந்த வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதிஒதுக்கீடு தொடர்பாகவும், அவற்றில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிகள் உள்ளடக்கப்படாமை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு, பெற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட வேலைத்திட்டங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான அரசியல் நலன்களும் அற்ற வகையில் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இன்றைய கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.